முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் - வெண்பா - 8. வண்ணான் மலை

வெண்பா

8. வண்ணான் மலை


சோலையன் மற்றும் அரசியின் வாழ்க்கையைப் போலே இந்த சமுதாயத்தில் பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. எப்போது எங்கே வழிமாறிச் செல்கிறது என்று எவரும் நடக்கும் வரை அறிவது இல்லை. சிலருக்கு வாழ்க்கை என்பது அனுபவம் என்று நினைத்து ஓடுகின்றனர். சிலருக்கு அது நரகம் ஏன் பிறந்தோம் என்று ஏங்கி வாடி நிற்கின்றனர். பலரின் மனதிற்குள்ளும் ஏன் பிறந்தோம் என்ற நினைப்பும் ஏன் வாழ்கிறோம் என்ற ஆதங்கமும் இருக்கும். ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கையில் கண்மூடி உறங்கி கனவிலே வாழ்கிறோம். தொடர்ந்து வாசியுங்கள் மனிதனுக்குள் மிருகம் புகுந்து அந்த மிருகம் மனிதனாக மாறியதா இல்லை மிருகமாகவே வீழ்ந்ததா என்று அறிந்துகொள்ள.

சோலையன் மற்றும் அரசியின் நிகழ்வை சொல்லிமுடித்த முந்தைய அத்தியாயத்தின் போது ரயில் அனேகல் தாண்டி சென்றுகொண்டிருந்தது. கதை மாந்தர்கள் இருவரும் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது எமன் ஒருவன் குறுக்கிட்டான் என்று தான் சொல்லுவேன். என்னடா இது எமன் யார் என்று யோசிப்போருக்கு நான் சொல்வது என்னவென்றால், இன்பத்தை அழித்து இதயத்தில் அடிக்கும் மணியாக நாம் உணர்வது இன்றைய தொலைபேசி தானுங்கோ எமன். தொலைபேசி ஒலிக்கவே சத்தம் ஏதும் கேட்காமல் தன்னை மறந்து இருந்தான் அவன். யார் நினைப்பில் இருந்தானோ? யார் அவன் இதயத்தில் குடிகொண்டு மலர்ந்த மொட்டு என்று அவன் அறியவில்லை. ஆனாலும் அவனுடைய மனம் கனமாகவே இருந்தது.

இதை உணர்ந்த அந்த பெரியவர் தம்பி என அழைத்து "உங்கள் போன் அடிக்குது" என அவனிடம் கூற எடுத்து அட்டென்ட் பண்ணினான் மனதில் ஏதோ சிந்தனையுடன் இருந்தவன். உலருபவன் போலே யாரு என்றான். டே மச்சான் நான் தான்டா தினேஷ். ஆன் சொல்லு மச்சான். டேய் நான் இப்போ நீ சொன்ன ஹோட்டல் பக்கத்துல தான் இருக்கேன். ஆன் அப்படியா. இரு மச்சான் ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுறேன். சரி சீக்கிரம் கூப்பிடு என்று சொல்லி இருவரும் போன் கட்செய்தனர்.

சார் என் பிரண்ட் தான் கால் பண்ணான். நீங்க எங்க சாப்பிடுவீங்க. நான் சேலம்ல எதாவது வாங்கி சாப்பிடுவேன் தம்பி. சரி சார் ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல சாப்பாடு நல்லா இருக்கும் உங்களுக்கு என்னவேணும் சொல்லுங்க. நான் வாங்கிட்டு வரச்சொல்றேன். இல்லை தம்பி உங்களுக்கு எதுக்கு சிரமம். இதுல என்ன சார் இருக்கு என்று சொல்லிக்கொண்டே நண்பனுக்கு கால் பண்ணான் மச்சான் ஒரு கொத்து பரோட்டா வாங்கிக்கோ, ஐந்து இட்லி அப்பறம் வாழைப்பழம் வாங்கிட்டு வாடா. சரிடா எந்த கோச்? S5. சரி நான் வாங்கிட்டு வந்துடுறேன் எனச்சொல்லி போனை கட் பண்ணினான். என்னத்தம்பி இப்படித்தான் யாருக்காவது வேலை கொடுத்துட்டே இருப்பிங்களோ. இல்லை சார் எனக்கு சாப்டுட்டே பயணம் பண்றது ரொம்ப புடிக்கும். அப்படியா எனச்சொல்லி இருவரும் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டு சென்றனர்.

இயற்கையின் அழகை சொல்லவேண்டும் என்றால் பெங்களூரில் இருந்து ஓசூர் அடையும்வரை தான் இயற்க்கையின் அழகை ரசிக்கமுடியும். அதற்குப்பின் இருட்டிவிடும். பெங்களூரில் இருந்து ஓசூர் அடையும்வரை ஆங்காங்கே மலர்கள் பயிரிடப்பட்டு இருக்கும். நடுநடுவே யூகலிப்டஸ் மரமும் வளர்ந்து வாசனை வீசும். கனமான இதயம் கூட மென்மையாக இதழுக்கு இதம் தரும் பெங்களூரின் அழகை ரசிக்க. அதிகமா பெங்களூரில் பயணம் என்றாலே மேலிருந்து இறங்குவது போலும் கீழிருந்து மேலே ஏறுவது போலும் இருக்கும். அப்படியென்றால் மலையேறும் அனுபவம் போலேதான் இருக்கும். இங்கே அதிகமா செம்மண் தான் ஆர்கானிக் பார்மிங் பண்ணுவாங்க கொட்டகை அமைத்து. சிலர் பூத்தோட்டம் மாதிரி அமைத்து பூ வளர்ப்பாங்க. பார்க்கவே அழகாக இருக்கும் ரயில் கடந்து செல்லும்போது. ஏனென்றால் குறுகிய பாதைதான் ஓசூர் வரை. அதனால் ரயிலின் உள்ளேயிருந்து பார்க்க அழகாக இருக்கும் இயற்கை.

இப்படியே அவர்கள் இயற்கையின் அழகை ரசிக்கொண்டேவர அவர்கள் இருவரிடமும் மௌனமே குடிகொண்டது. மௌனம் குடிகொண்டால் சொல்லவா வேண்டும். சிலநேரங்களில் மௌனம் நம்மை காக்கும் சிலநேரங்களில் மௌனம் நம்மை கொள்ளும். ஏனென்றால் பலரின் வாழ்க்கையில் பலவிதமான நினைவுகள் மௌனமாகே உறங்கிக்கொண்டு இருக்கும். அப்படியே இவர்கள் இருவரின் மனதிலும் துன்பங்களும் காதலும் அன்பும் ஆழமாக உறங்கிக்கொண்டு இருக்கிறது மௌனத்தில் பேரில். தற்போது ரயிலும் ஓசூரை அடைந்தது. நண்பனிடம் பார்சல் வாங்கிவிட்டு நன்றிசொல்லி விடைபெற்றான்.

அதேநேரத்தில் வண்டியும் தர்மபுரியை நோக்கி நகரத்தொடங்கியது. அவனும் ஏறித்தனது இருக்கையில் அமர்ந்தான்.

ஓசூரில் அதிகமான மக்கள் ஏறுவர், ஏனென்றால் இந்த எலக்ட்ரானிக் சிட்டி சில்க் போர்டு வரை இருக்கும் கம்பெனியில் வேலை செய்வோர் இங்கயே வந்து ஏறுவர். அப்படி ஏதேனும் பெண்வந்து உட்கார மாட்டார்களா என்ற ஏக்கத்திலே உட்கார்ந்து இருந்தான். S5 கோச் வழியே புகுந்து பலர் சென்றனர். ஆனால் எவரும் அவர்களுடைய கம்பார்ட்மெண்ட்யை சட்டை செய்யவே இல்லை. கடையை சாத்தும் நேரத்தில் ஒரு ஐம்பது வயதிருக்கும் பருவப்பெண் ஒருவர் வந்து அங்கே நின்று தம்பி S5 - 45 இங்க தானே. ஆமாங்க மேடம் இங்க தான் எனச்சொல்ல அந்த பருவப்பெண் அங்கே அமர்ந்தார். பருவப்பெண் எனச்சொல்ல காரணம் இருக்குங்கோ. இப்படியே அமைதியாக சென்றுகொண்டிருந்த பயணத்தில் ரயிலின் கூ கூ சத்தம் கேட்டுக்கொண்டும், புதிதாக ஏறிய பயணிகள் தங்களது இருக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். டாய்லெட் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.

அவன் அவரிடம் தன் மனதில் இருந்த அடுத்த கணையை எறிந்தான். சார் நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் சொல்லவே இல்லை. என்னகேள்வி கேட்டிங்க நான் என்ன பதில் சொல்லலை உங்களுக்கு எனச் சிரித்துக்கொண்டே கேட்க. என்கிட்டே ஏன் இப்டி என் மனம் பிளிரும்படி பேசுனீங்க. அதான் சொன்னனே என் வழக்கமே புடிச்சவங்க கிட்ட பேசுறது தான். புடிச்சா பேசுவேன். இன்னைக்கு நீங்க ரயிலுக்கு காத்திருந்திங்களே நியாபகம் இருக்கா. இருக்கு சார் இன்றைய நாள நான் மறக்கவே முடியாது. இன்னைக்கு மஜெஸ்டிக்ல ட்ரெயின் லேட்டா தான் எடுத்துக்கொண்டு வந்து போட்டாங்க. ஆனா நீங்க ட்ரெயின் போயிருச்சோனு நினைத்து தலையில கைவைத்து இருந்திங்க இந்த ட்ரெயின் தான் நீங்க போகவேண்டியது என்பத மறந்து. ஆனாலும் எதையோ பார்த்துக் கொண்டிருந்திங்க. நீங்க பார்த்தது என்னவென்று நானும் உங்கள் முகத்தை உணர்ந்து பார்க்க ஏங்கிக்கொண்டிருந்தேன். பின்னையே தெரிந்தது உங்களின் இரக்ககுணம். அந்தப்பையன் கிட்ட நீங்க பேசிமுடித்த உடனே உங்கள் முகத்தில் ஒரு சந்தோசம் மகிழ்ச்சி ஒளியாக வீசியது. அந்த ஒளியே என்ன உங்ககிட்ட பேசவைத்தது. இதைக்கேட்டு அவன் அப்படியே அவரின் விழிகளையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். எவ்வளவு ஆழமான கண்ணோட்டம் உள்ள மனிதர் என்று. அவன் பெயர் மதீ சார். தந்தி விற்கும் பையன். அவனிடம் பேசியதால் தான் உங்களிடம் அன்புடன் முகத்தில் கோபம் புறக்கணிப்பு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேன். தெரியும் தம்பி பார்த்தேன்.
உங்களின் வாழ்க்கையிலும் காயங்கள் ஆழமாக இருக்கும் போலயே. ஆமாம் தம்பி என்மனதிலும் காயங்கள் வடுக்கள் ஏக்கங்கள் ஏமாற்றங்கள் ஏமாற்றுக்கள் பரிதவிப்பு சோகங்கள் சோதனைகள் இதயத்தில் கண்ணீராக இன்னும் வடிந்து கொண்டிருக்கு. ஆனாலும் அதை எல்லாம் தவிர்த்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உங்களமாதிரி சிலரிடம் பேசி மகிழ்ந்து.
இவ்வளவு அதிகமாக பேசும்போதே தெரியும் உங்களிடம் கற்பனைகள் கடந்த கண்ணீர் கணமாக குடிகொண்டிருக்கும் என்று. ஆமாம் தம்பி உண்மையே. அதிகமா பேசுவோர் அதிகமான சுமைகளையும் சேர்த்து தானே சுமக்க வேண்டிருக்கு. முன்ன எல்லாம் நான் இவ்வளவு அதிகமாக பேசமாட்டேன் தம்பி.
ஆனால் காலமும் மனிதர்களும் என்னை மாற்றிவிட்டனர். ஏன் என்னுடன் பிறந்தோர் என்னைப் பெற்றோர் கூட. இப்படி அவர் சொன்னவுடனே அவன் மனதில் என்னடா இந்த மனிதர் இப்படி தன் பெற்றோரை இப்படி சொல்கிறாரே என்று அவன் சிந்திப்பது போலே நீங்களும் சிந்திப்பீர்கள் என்றால் தொடர்ந்து வாசியுங்கள் வெண்பாவை.

நான் இப்போ இருக்குறது எல்லாம் மதுரையில தான் தம்பி. ஆனா நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே கீழக்கரை டூ ஏர்வாடி நடுல ஒரு சின்ன கிராமம். எங்க அப்பா பேரு மலையாண்டி அம்மா பேரு பரிமளம். அவங்களோட கலியாணம் முடிஞ்சு இரண்டு வருடம் கழிச்சு தான் நான் பொறந்தேன். என்ன வளர்த்தது எல்லாமே எங்க அப்பம்மா தான். அப்படினா. எங்க ஊருல அப்பாவோட அம்மாவ அப்பம்மானு சொல்லுவோம் அம்மம்மானா அம்மாவோட அம்மா.

எங்கப்பா ஒரு வண்ணான். ஒரு வயல் கூட ஒரு தோப்பு குத்தகைக்கு எடுத்து பொழப்பு நடத்திட்டு இருந்தோம். ரெண்டுமே எங்களோட தொழில். எங்கப்பா ரொம்ப நல்ல மனிதர் ஒரு சின்ன விஷயம் நடக்கும் முன்னாடி வர. ஆனா அதுக்கப்பறம் தான் எனக்கு தெரிஞ்சது அவர் ரொம்ப கேவலமான மனிதர் என்று. அவராலே நானும் என் மனம் மாறி வீழ்ந்து போனேன் என்று சொல்லலாம் சிறுவயதிலே.

எங்கப்பா ஒரு வண்ணான் என்றாலும் ரொம்பவே அழகாக இருப்பார். அந்த அழகை பார்த்தே எங்கம்மா பரிமளம் அவர கலியாணம் பண்ணினார்னு அடிக்கடி சொல்லுவாங்க.
தினந்தோறும் அவர் ஒருபக்கம் கீழக்கரை வரையும் மறுபக்கம் ஏர்வாடி வரையும் சென்று துணியெடுத்து வந்து சலவை செய்து கொடுப்பார். அந்த சலவைத்தொழிலில் வரும் பணத்தை வைத்து விவசாயம் செய்வார்.

கொஞ்சமா வருமானம் வந்தாலும் சந்தோசமா தான் வாழ்ந்தார். ஆனாலும் கல்லு குடிப்பார். குடித்துவிட்டால் எங்கம்மாவை வாடிவாடி என்று இழுத்துப்போட்டு அடிப்பார். எங்கம்மாவை அவரு அன்பாக எல்லாம் பண்ணுனார் என்று என்னால ஒருபோதும் சொல்லமுடியாது சொல்லவும் மாட்டேன்.

என்னையும் நான் உண்மையான அன்புக்கு பொறந்ததா என்னைக்குமே நெனச்சது இல்லை. ஏன்னா எங்கப்பா பண்ணின விஷயங்கள் அப்படி. தாம்பத்தியம் கூடல் உறவு எல்லாமே அன்பால நடக்கணும். ஆனால் எங்கப்பா குடித்துவிட்டு தான் எல்லாமே. அப்போ எல்லாம் எங்க ஊர்ப்பக்கம் கல்லு ரொம்ப சுலபமாக கிடைக்கும்.
முக்குக்கு முக்கு கல் இறக்குவாங்க. கொஞ்ச நேரத்திலயே காலி ஆகிடும்.

கடற்கரை ஏரியா வேறயா நிறைய தென்னை மரம், பனைமரம் இருக்கும். நல்ல வசதியானவங்க என்ன பன்னுவாங்கனா எல்லாத்தையும் குத்தகை மாதிரி பாதுகாக்க யார்ட்டயாவது கொடுத்துடுவாங்க. அவங்களுக்கு மாசம் மாசம் கிடைக்கிற காசுல பாதி கொடுக்கனும். எங்கப்பன் பாதுகாப்பது போக சலவைத்தொழிலும் செய்து வந்தார்.
விளைச்சல் நேரத்துல பயிர் செய்வோம். மத்த நேரத்துல எல்லாம் சலவைத்தொழில் தான்.

கீழக்கரை ஏர்வாடி பக்கம் எல்லாம் முஸ்லிம் தான் அதிகம். அவங்க கிட்டதான் நாங்க நிலம் குடி இருப்போம். விவசாயம் பண்ணுவோம்.

எங்கப்பா சலவைக்கு எடுக்க போறது எல்லாம் பல வருச பழக்கம் நிறைய பேரு. அதுலயும் முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் அந்த காலத்துல சலவை செய்துதான் உடுப்பு போடுவாங்க.ஒருநாள் எங்கப்பா கீழக்கரையில இருந்து உடுப்பு எடுத்து வந்திட்டு இருக்க. மழை மேகமா இருந்திருக்கு உடனே கழுதைய வேகமாக பத்திட்டு வந்திருக்கார். வருண பகவான் லேசா எட்டிப்பார்க்க இவரும் வேகமாகவே வந்திருக்கார்.

இவரு வேகத்தவிட அதிகமான வேகத்தில வருண பகவான் மண்ணில் விழ தொப தொபனு நனைஞ்சு விட்டார். சரி இனிமே நனைஞ்ச ஜூரம் வந்துரும்னு ஒருதோட்டத்து வாசலில் உள்ள படிக்கு கீழ மழை தம்மேல விழாமல் நின்னிட்டு இருந்திருக்கார். அஞ்சு பத்து நிமிசம் கழிச்சும் மழை நின்னபாடில்லை. கொஞ்சநேரம் போக போக அப்படியே கால் விரிச்சு படுத்தமாதிரி உட்கார்ந்து இருக்க. யாரோ விறுவிறுனு வேகமாக வந்து நின்னு இருக்காங்க.

நின்னு இருந்த ஆள் சுத்திமுத்தி பாத்துட்டு கழுதை ஓரமா கட்டப்பட்டு இருக்க. ஆள் யாரும் இருக்காங்க போலயேனு நினைச்சுட்டே  மழையில தொப தொப நனைந்த படியே நிக்க. கீழே உட்கார்ந்து இருந்தவன் எழுந்து வெளியை வந்து இருக்கான். வெளியே மழையில நனைந்தபடி இருக்கறது ஒரு பொண்ணு தான்னு உணர்ந்தவர் பேச ஆரம்பித்துவிட்டார். யாருமா நீ எங்க போற. இந்த மழையில ஏன் நனைஞ்சுட்டு இருக்க.

ஆன் மழைக்கு என்னோட ஓடம்பு ரொம்ப பிடிச்சு இருக்கு அதான் நனையிறேன். என்னடா இவ நம்மகிட்ட குதற்க்கமா பேசுறா.  அப்படியே பதில் சொல்லிட்டு இருந்தவள் தன் தலையில் இருந்த தயிர் விற்கும் சட்டியை இறக்கி கீழே வைத்தாள். குறுகுறுனு பார்த்துட்டே இருந்த மலையாண்டி, என்ன தயிர் விக்கிறவளாக்கும் நீ. ஏன் நீங்க தயிர் தருவிகளாக்கும். நான் தயிர் தர்றது இருக்கட்டும். தயிர் சமஞ்சதா இல்ல சமயாததா. மழையில் நனைந்த எந்தவொரு உடலும் ஆடை இருந்தும் மோகத்தைத் தூண்டும்.

மலையாண்டியின் மனமும் மாறியது. தயிர் சமஞ்சு கையில நெய்யும் இருக்கு வெண்ணெய்யும் இருக்கு. ஆனா கடைய ஆள் இல்ல. பால் கறக்க ஆள் எதிர்பாரக்கறயாக்கோம். யோ நான் ஒன்னட்ட சொன்னேனா. சும்மா நீ கேட்கறதுக்கு குதற்க்கமா பதில் சொன்னா ஒம்பாட்டுக்கு பேசுற. பல்ல ஒடச்சுப் புடுவேன் போயா எனச்சொல்லி மழைவிட்டதை உணரந்து முன்னே நடந்து சென்றுவிட்டாள். அவள் நடந்து செல்லும் மோகன அழகை வர்ணிக்க எழுதும் பேனாவிற்கே இதயம் ஒன்று இருந்தால் மையல் கொள்ளும் அவளுடைய மேனி அழகில்.

அப்படியொரு கருப்புப் அழகி அவள். மனதில் குடிகொண்ட தேகம் மனதை பறித்ததோ என்னவோ அவளைத் தொடர்ந்து அவனும் செல்லத் தொடங்கினான்.

எதிர்பாராத திருப்பங்கள் இல்லாமல் உப்பில்லாத உணவாக முடித்துள்ளேன் இந்த வாரத்தை. மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம் மெரு கூட்டப்பட்ட வெண்பாவின் மோகத்தில்.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...