வெண்பா
10. பனங்காய் பணியாரம்
வணக்கம் தோழமைகளே. இந்த வாரத்திற்கான பகுதியை எழுத முனையும் போதே இதழில் எச்சி ஊறுகிறது "பிரியாணியின்" மணம் ஏங்கி. பிரியாணியை பரிசாக கொடுக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு "இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்" .
"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்" - திருக்குறள்.
மது, மாது எனச்சுற்றி அழையும் சிங்கம் எப்போதும் சிதைந்து பிறர் மதிக்கப்படாமல் போகும். தொடர்ந்து வாசியுங்கள் எனது வெண்பாவை. நிறைய மனித மிருகங்களின் கொடுங்கோல் மனது பற்றிய கதை இது.
கையில அந்த கூர்முனையான தேங்கா உறிக்கும் இரும்பு கம்பி ஏந்திய அஞ்சு நிமிசத்திலயே மலையன் மயங்கிட்டான். அவனுக்கு "சரசு" தான் நம்ம மழையில நனையுறப்ப ரோட்டோரமா பார்த்த பொண்ணுனு மட்டுமே நியாபகம் இருந்துச்சு.
அவன் மயங்குறப்ப அவ அந்த துணி அப்பறம் ஒரு கப்புல கொஞ்ச தண்ணீ எடுத்துட்டு வேகமா ஓடியாந்தா. இவன் பக்கத்துல வந்த ஒடனே அத பக்கத்துல இருக்கவங்க கிட்ட கொடுத்துட்டா.
கூட்டத்துல இருந்த ஒருத்தன் தான் அவனோட கைய நல்லா தண்ணீ வச்சு தொடச்சி துணிய வச்சு லேசா கட்டினான். கட்டி முடிச்சு அவன் மலையன் முகத்துல தண்ணீ தெளிக்கறப்ப தான் கனவுலோகத்துல இருந்து அம்பலார் தோட்டத்துக்கு வந்தான்.
இதுக்கு இடையில மலையன் அவளோட கனவுலோகத்து கட்டில்ல கரகாட்டமும் ஆடிட்டான். கரகாட்டம்னா சாதாரண கரகாட்டம் இல்லைங்க. ஆணும் பெண்ணும் அன்பின் உருவா ஆடும் கலவி ஆட்டம்.
முந்தையப் பகுதியில சொன்ன மதனன் ரதிதேவிய பத்தி சொல்ல ஓரிரு வரிகள். மதனன் காமத்தின் தெய்வம் கடவுள்னு புராணங்கள்ல சொல்லப்படுது. ரதிதேவி மதனனோட மனைவி.
கனவுலகத்துல இருந்து மீண்டுவந்த மலையன் தண்ணீ தெளிச்சு கட்டு போட்டவன் கிட்ட கேட்டான்.
ஏப்பா மருது,
"அம்பலார் அய்யா கட்டுப்போட்டா மாதிரி இருந்துச்சே". ஏன் நாங்க கட்டுப்போட்ட ஏத்துக்க மாட்டீகளோ.
இல்லப்பானு பேசிட்டே சுத்திமுத்தி பார்த்தான் "எல்லாரும் வேலய முடிச்சு காசு வாங்கிட்டு வீட்டுக்கு போய்ட்டாகனு நினைச்சுகிட்டான்.
இவனுக்காக அம்பலார் மட்டும் காத்திட்டு இருந்தார் நாக்காலிலனு சொன்னா மருது. அவன் சொன்ன ஒடனே மலையன் திரும்பி பார்த்தான் குடிசைக்கு வெளிய அம்பலார் ஒக்காந்திருக்க. மருதும் மலையனும் நடந்து போனங்க அவரநோக்கி.
அத பாத்த அம்பலார் என்னப்பா மலையா எப்டி இருக்கு வலி "கொஞ்சம் பருவாயில்லயா". டே மருது நீ இவன கூட்டிப்போ பத்தரமா. இந்தா ஒன்னோட சம்பளம்னு மருதுக்கு நூறு ரூவாயும். மலையனுக்கு எரநூறு ரூவாயும் கொடுத்து "டே மலையா பத்தரமா போ". பொண்டாட்டிய வேப்பல மஞ்ச அறச்சு கட்டச்சொல்லு.
சரிங்க அய்யானு சொல்லி ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சாங்க.
ரெண்டு பேருக்கும் ஒரே ஊருதான். மருதி ரொம்ப "முசுடு" யார்டயும் அதிகமாக பேசமாட்டான். ரெண்டு பேரும் நடந்து போறப்ப மலையன் கேட்டான்
"ஏன்பா மருதி செவப்பு சீல உடுத்தி ஒன் பொண்டாட்டி வந்திருந்தாலே"
அவகூட நீ போகலயாப்பா.
மொறச்சுட்டே என் பொண்டாட்டி வரலயே ஒன்னாலதான் இவ்ளோ நேராச்சு. நான் என்னப்பா பண்ண யேன்நேரம்.
செரிப்பா அப்ப நான் பார்த்த அந்த செவப்பு சீலக்காரி யாருப்பா. மலையனோட சுயரூபம் யாருக்கும் தெரியாது அவன் விடகுணம் புடிச்சவன்னு. எதாவது தெரிஞ்சுக்க இப்டிதான் சுத்தி வளச்சு கேட்பான் பேசுவான்.
அந்தப்புள்ள முள்ளுவாடி புள்ள. தயிர் விக்கிறவ அப்பறம் வேலைக்கு கூப்பிட்டா வருவா. நல்லா வேலை பார்ப்பா, தான் கலியாணத்து அவளே காசு பணம் சேத்து வைக்கிறவளாக்கும். அழகுலயும் கொறஞ்சவ இல்லையா கருப்பு தங்கம். சிரிச்சான ஓடம்கூட துடுப்பில்லாம ஓடுமாக்கும்.
அடே மருது அவ்ளோ சுந்தரி மாதிரி தெரியலயேடா. அடபோப்பா நான் கலியாணத்துக்கு முன்னாடியே அவள தேடித்தேடி தோப்பு தோப்பா அவ போற இடமெல்லாம் போவேனாக்கும். "பனங்காய்ல பணியாரம்" செய்வா. அப்படியே பனங்காயோட அவள சாப்பிடனும் போல இருக்கும்.
நானும் உருகி உருகி அவபின்னால சுத்தினேன்பா. ஒருமுற அவகிட்ட முல்லப்பூவ கொடுத்து நாம கட்டிக்கலாமானு கேட்டேன். செருப்ப எடுத்து அடிக்க வந்துட்டாப்பா.
அடப்பாவி இப்டியெல்லா இவன் திரிஞ்சு இருக்கானா. இவன் சரியான முசுடுனு நெனச்சனே பயபுள்ள நமக்கு மேல இருப்பான் போலயே என தனக்குள்ளயே சொல்லிக்கிட்டான்.
மெல்ல அவனுக்கே சந்தேகம் வராதபடி ஏன்பா அப்ப கலியாணம் ஆகிருச்சா அவளுக்கு. இல்லப்பா ஒன்ற வருசத்துக்கு முன்ன பொண்ணு பார்துட்டு போனாங்க ராம்நாட்ல இருந்து. ஆன கலியாணத்துக்கு ஒரு மாத்தைக்கு முன்ன குடிச்சுபுட்டு கடலுக்கு மீன்புடிக்க போன இவ அப்பன் செத்துட்டான்.
ஒருவாரம் கழிச்சுதான் பெணம் கிடைச்சது. பொண்ணு பாத்துபோன மாப்ளவீடு திருப்பி பதில் சொல்லலை. இப்போ அவளுக்கு ஒரு இருபத்தோரு வயசுதேன் இருக்கும். இதகேட்டு மனசுக்குள்ள சந்தோசமும் முகத்தில வருத்த பாவனையிலயும் இருந்தான் மலையான்.
சந்தோசப்பட்டது எதுக்குனா இனி அவள மயக்குறது சுலபமாச்சே. ஒரு பொண்ண மயக்கி மசக்கயாக்கனும்னா அவளோட உள்மனசுல இருக்க நெருப்ப அணைக்கணும். பின்னதான் அவள அணைக்க முடியுமாக்கும். பொட்ட புள்ளைங்க சக்கரையா பேசுனா வளைஞ்சுருவாங்க(இது எல்லா பொண்ணுக்கும் பொருந்தாது, ஒரு முயற்சி தான்).
இப்படியே மனசுக்குள்ள யோசிச்சுட்டு பேசிட்டே ஊருக்குள்ள நடந்து போய்ட்டு இருந்தான். எதுக்காலயே அவனோட மாமனார் தேவராசு வர்றத பாத்துட்டான். மொகத்து உம்முன்னு வச்சுட்டே பக்கத்துல போனான்.
போனவன் அவர மூஞ்சிக்கு நேர பாக்காம வானத்த பாத்தே நின்னான்.
அவரு "நல்லா இருக்கிங்க" என முடிக்கற முன்னயே. ஆன் ஆன் ன்னா. அவன் இடது கைய பின்னாடி மடக்கு வச்சிருந்தான். அவரு சரி மாப்ள ஏருவாடில ஒரு வேல இருக்கு பொய்ட்டு வந்திர்றேன்னு சொல்லிட்டு நடந்து போய்ட்டார்.
எல்லா மாமாக்கு பொண்ணு குடுக்கறவர தான் மருவாத எல்லாம். அதுக்கப்புறம் வார்த்தைகூட காசு கொடுத்தா வராது. அதும் கொடுக்கறதா சொன்னத கொடுக்கலனா மனுசனாவே மதிக்கமாட்டங்க.
மலையனுக்கு கலியாணம் ஆகி ஏழுவருசம் ஆச்சு. கலியாணத்தப்போ தேவராசு 5 பவுன் நக போடுறேன் சொல்லிப்புட்டு. நாளு பவுன் போட்டுட்டு ஒருபவுன் ரெண்டு மாசத்ல போடுறேன் சொன்னாரு.
சூழ்நில அவரால போடமுடியல. ரெண்டு வருசம் கழிச்சு போட நெனக்கை பரிமளம் வேணானு சொல்லிட்டா. ஏன்னா நாளுபவுனுல ரெண்டு பவுன சாரயம் குடிச்சே அளிச்சுட்டான்.
அதனால வீட்டுல எப்பயும் சண்ட நாறும். அவர பாத்த, காலையில சொல்றத கேட்காம பரிமளம் ஓடுன கோவம், கைவலினால
நேரா சாராய கடைக்கு போய்ட்டான்.
இராம்நாட் ஜில்லால கள்ளுக்கா பஞ்சம். பனைமரம் செழுச்சு கள்ளு கொட்டே கொட்டுனு கொட்டும். எப்பபோனாலும் ஒருமரத்துக் கள்ளு கிடைக்கும்.
கள்ளுக்கடை ஒருசின்ன தோப்புக்குள்ள இருக்கு. மலையப் போலயிருக்கும் ஒவ்வொரு மரமும். இவன் உள்ள போகும் பனமரம் பேய் மாதிரி ஆட கடற்காத்து வாசமும் சேந்து அடிக்கறப்போ கள்ளு குடிக்கறது ஒரு அலாதி அனுபவம்.
பறவைகள் பறந்து தன் கூட்டத் தேடியோட, கடல்தன் காதலை கரைக்கு உணர்த்த, மாறி மாறி உள்வாங்கி பின் கரைய முத்தமிடுவதுமாக இருந்தது. வானத்துல நிலாவும் நட்சத்திரமும் மின்ன. கடக்கறை ஓரமா நடந்து கள்ளுக்கடைய அடைஞ்சான்
"குருத்தில் படிந்த
பாலைப் பருக,
குருதியும்
முறுக்கேறும்,
வெண்நுரை
பொங்கும் சுரம்
பருக ஏங்கி,
வண்டுகளும் தேடி
உயிர்விடும்,
உன் அமுத
கனியைப்
பருகும்போது,
நரம்புகளும் தெரிக்கும்"
கள்ளோட அருமை யாருக்குத் தெரியும். பலவகை நோய்க்கு மருந்தா இருந்த பானம் கள். ஆனா அதிகமா குடிச்சா போத இருக்கும். ஒடம்பே சிலிர்க்கும் அதன் புளிப்புல. கள்ளு குடிச்சு முடிச்ச கிளம்ப எந்திருச்சான் மலையன்.
பக்கத்துல உட்கார்ந்து இருந்தவன் சொன்னான் "சிலரு கலியாணம் முடிஞ்சும் ஆசபடுறாங்க பங்காளி" என தள்ளாடிகிட்டே சொல்ல.
ஏதுமே தெரியாதவன் மாதிரி வலது கையால காத கொடஞ்சிட்டே எந்திருச்சி போய்ட்டான் மலையன். ஆன அவன் மனசுல இவனுக்கு எப்படி தெரியும்னு யோசிட்டே நடந்து வீட்ட அடஞ்சான்.
அவன் வீடு ஒரு சின்ன குடிசவீடு தான். பின்னால நடந்து ஒரு அம்பது மீட்டர் போனா அவன் குத்தைக்கு எடுத்த தோப்பு.
வீட்டுக்குள்ள போக வாசல மிதிக்க போறப்ப உள்ளயிருந்து வந்தவ,
"அட என்னயா இது கையில கட்டு, ரத்த கறைனு" பாத்து கேட்க.
வலது கையவச்சு ஒருதள்ளு தள்ளிவுட்டான் பரிமளத்த.
ஏண்டி சிரிக்கி மவளே. காலையல என்னனா கூப்ட கூப்ட கண்டுக்காம ஓடுற. ஒங்கப்பன் என்னனா பாத்தும் கேட்காம போறான், போடவேண்டிய நகநட்ட ஒழுங்க போடலயேனு வருத்தமில்ல. கைய வந்து என்னாச்சு கேட்கா போடி ராவிப்புடுவேன் ராவி.
ஒன்ன கலியாணம் பண்ணி என்னத்த கண்டேன். ஏம் பொளப்பு நாறத்தேனே செய்யுது. ஒரு அஞ்சு ரூவா காசுக்கு பாசி வாங்கி தந்திருப்பயா. பேசிறான் பொட்டச்சி கணக்க ஒங்க அப்பன் போடலனு. ஆம்பளையா நீனு பொட்டப்பய எனக் கோபத்துடன் அவசொல்ல.
வேகமாக ஓடிப்போய் வலது காலத்தூக்கி ஒரு எத்து எத்தப்போய் நிப்பாட்டினான். அடியா அடியா அடிக்கறதுக்கு பதிலா,
"இந்தா எம்புட்டு சீலைய கட்டிக்கிட்டு திரினு மாராப்புல இருந்த துணியை வலது கையில படக்குனு எடுத்தா".
அடிப்போடி ஏன் கள்ளப்பய மவளேனு சொல்லி நடந்து தோப்புக்கு போய்ட்டான்.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக