வெண்பா
5.வாடகாத்து சோலையன்
பையப்பனஹள்ளியை விட்டு நகரத்தொடங்கிய ரயில் பெலந்தூர், கார்மேலரம், அனேகல் கடந்து ஓசூர்யை அடையும் வழக்கமாக. பெங்களூர் மெயினில் இருந்து கிளம்பியதிலிருந்து ஓசூர் அடையும் வரை சிலசமயங்களில் இரு கிராஸ்ஸிங் இருக்கும் சிலசமயங்களில் மூன்று இருக்கும். தற்போது நமது ரயிலும், ரயிலில் பயணம் செய்யும் நமது கதைமாந்தர்களும் பெலந்தூர் ஸ்டேஷனை கடந்து பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் ஆனந்தமான தருணம் என்றுதான் நான் சொல்லுவேன், ஏனென்றால் பலவிதமான அனுபவங்கள் பலவிதமான மனிதர்களின் நட்பும் அன்பும் நம்மிடையே குடிகொண்டு தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை சிந்திக்க வைத்து நல்வழிபடுத்தும்.
எத்தனையோ விதமான பயணங்களில் நான் நிறைய மனிதர்களை சந்தித்துள்ளேன். ஆனால் அவர்கள் யாரும் என் மனதில் குடிகொண்டு வசியப்படுத்தவில்லை, பார்வையினாலும் அன்பினாலும். அதேபோல் என்னையே நான் முட்டாளாக வாழ்ந்துள்ளேனா என நினைக்க வைத்ததும் இல்லை. அதை என் முகத்திற்கு நேரெதிரே சொன்னதும் இல்லை. இந்த உலகத்தில் முதுகுக்கு பின்னால் இருந்து தாக்கும் ஆயுதத்தைவிட, விழியின் பார்வையில் இருந்து ஒருவர் நம்மை வழி நடத்துவதும், நம்மை உள்ளத்தால் நாம் உணர, நல்வழியில் பயணிக்க வார்த்தையால் வதைத்து சொல்வதும் உயர்ந்த ஒன்று என்று தான் நான் நினைக்கிறேன். அப்படி எண்ணியே அவருடன் சாதரண மனிதனைப் போல் என்னை முட்டாள் என்று சொல்கிறீர்களே என்று அவரிடம் சண்டையிட்டு விலகிச்செல்ல விரும்பவில்லை. அவரிடம் அன்புடன் நடந்து கொள்ளவே விரும்பினேன் எனசொல்வதே உண்மை. ஏனென்றால் இன்றைய இந்திய திருநாட்டில் அனுபவமும் ஆதரவுமாக ஒருவர் இல்லாத ஏக்கத்தினால் பலர் வழிமாறி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக இருக்க நான் விரும்பவில்லை. எனக்கான வாழ்க்கையை நான் அமைத்துக்கொள்ள நான் விரும்புகிறேன் என்பதையே என்மனம் விரும்புகிறது என்பதை உணர்கிறேன்.
அவர் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னை வழிமாற்றும் எனநான் சிறிதும் நினைக்கவில்லை. என் வாழ்க்கை பயணம் மாறியதா இல்லை பயணத்தோடே கரைந்து விடுமா என நான் சிந்தித்து கொண்டிருந்த தருணத்தில் அவர் மறுபடியும் ஆனந்தமாக இளையராஜா அவர்களின் இசையினால் முகத்தில் ஒளிவீச பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தவர் காதிலிருந்து இயர்போனை கழட்டிவிட்டு, தம்பி உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு போலயே என்றார். அப்படி எல்லாம் இல்ல சார் இசைப்பிடிக்கும். கனத்த இதயத்தில் மென்மையை ஏற்படுத்தும் நம்மை எங்கோ பறந்து செல்லும் காக்கையின் மேலோ, பருந்தின் மேலோ காதல் கொள்ளவைக்கும் என்றேன்.
அவர் நகைத்தார் என்னத்தம்பி மனதில் காதல் வலிகள் வேதனைகள் காயங்கள் இருக்கும்போலயே என்றார். யார் மனதில் சார் காதல் இல்லாமல் இருக்கும், இதயம் என்ற ஒன்றே காதல் குடிகொள்ளும் அன்பின் கூடுதானே சார் என்றேன். என்னத்தம்பி அரசியலின் ஆழத்தைவிட, காதலின் மேல் உங்களுக்கு அதீத ஈர்ப்பும், அன்பும், அழகிய தாமரை மலர் உங்கள் இதயத்தில் இதயத்திற்கு உயிராக இருக்கும் போலயே என்றார். இல்லாமல் இருக்குமா சார் என்றேன். ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்றார். ஆனாலும் இன்றைய காதல் மோகத்திற்கும் உடல் சுகத்திற்கும் இருவர் சேரும் ஒன்றாகவே இருக்கிறதே தம்பி. இல்லை சார் இன்றைய காதலும் உயர்ந்தது தான் இன்றைய காதல் வெற்றியை அடையாமல் தோற்றுப்போவதற்க்கு காரணம் ஜாதி,மதம், இனம், சமுதாயம் இவற்றுக்குள் அடைந்து கிடக்கும் வயது முதிர்ந்தோர்களால் தான் சார். அவர்கள் காலமே சிறந்தது என எண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள். இன்றைய காதலின் மேல் உள்ள நம்பிக்கையைவிட மோகத்தின் மேல் அவர்களுக்கு அன்பு அதிகம். அதனால் தான் அவர்கள் பயம் என்ற பிம்பத்தை மட்டுமே பார்க்கின்றனர். அதன் அன்பை உணர்வை அறியாது இருக்கின்றனர் என்றேன்.
அழகு தம்பி சமுதாயத்தில் ஜாதி மதம் என்ற பிம்பம் மறைந்தால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த அரசியலார் செய்யும் எச்ச அரசியலும் ஆணவக் கொலைகளுக்கு ஒரு காரணம் அரசியல் என்றார். ஆமா சார் உண்மையான காதலை எடுத்துரைக்க ஊடகங்கள் இல்லை. பொய்யான விசயங்களையும் அசிங்கமான விஷயங்கள் அடங்கிய நிகழ்வுகளை வைத்து காசு சம்பாரிக்கும் வேசிகளாகத் தான் இன்றைய ஊடகங்கள் உள்ளன என்றேன். சிரித்துவிட்டார் அவர், என்ன தம்பி உங்கள நான் பூனைனு நினைத்தேன் நீங்க புலி மாதிரி பாயிரிங்க. சார் எனக்குள்ள பல தாக்கங்கள் இருக்கு, அந்த தாக்கத்தினால் என்வழியை மாற்றிவிட்டேன். அது இப்போ நீங்கள் வார்த்தை எனும் வேலால் என்னை தாக்கியதால் வெளிவருகிறது என் உள்மனம் என்றேன்.
ஹா ஹா ஹா, தம்பி நமக்கு உள்ளே இருக்கும் ஒரு விஷயத்தை, நம் மனம் விரும்பும் ஒன்றை நம்மால் செய்யமுடியாமல் இருக்கும் நிலையில் இருக்கிறோம். கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு நாங்க ஏங்கிய காலம் எல்லாம் இருக்கு. ஆனால் இப்போ கருத்து சுதந்திரம் இருந்தும் எங்கே எப்போ பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மனம் போன போக்கில் வாழ்க்கை போகுது என்றார். நாங்கள் இருவரும் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்து எங்களின் ஊடே நடந்து செல்வோர், எங்கள் கம்பார்ட்மெண்ட்ல உக்கார்ந்து இருக்கும் அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர். அதையேதும் நாங்கள் பொருட்படுத்தவில்லை.
நான் அவரிடம் கேட்டேன் ஏன் சார் என்னைப்பார்த்து இப்படி சமூகத்தை பற்றி அரசியலைப் பற்றி பேசணும்னு தோணுச்சு. உங்களால் என் வாழ்க்கை பயணத்தில் நான் எங்கு சென்று கொண்டிருக்கிறேன், எது எனக்கு வேண்டுமென சிந்திக்கத் தொடங்கிவிட்டேன் சார். ஏன் என்ன இப்படி இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் வார்த்தைகளால் இறக்கிவிட்டிர் என்றேன், சிரித்தார் அவர்.
இல்ல தம்பி உங்கள நான் இக்கட்டான சூழ்நிலையில் இழுத்துவிடவில்லை. உங்களை உங்களுக்கே திருப்பி கொடுத்துள்ளேன். என் கால வாழ்க்கையில் நல்ல வழிசொல்ல யாருமே இல்ல. எனக்கும் ஆசைகள் கனவுகள் விருப்பங்கள் எல்லாம் இருந்தது. ஆனால் நான் கஷ்டங்கள் பல பட்டு ஏதோ ஒரு வீதியில் பயணிக்கும் குரங்காக இருந்தேன். அதுபோல யாரும் வழிதெரியாமல் போகக்கூடாது என்று நினைக்கிறேன் என்றார். அதும்போக பார்க்கும் அனைவரிடமும் இப்படி பேசியதில்லை தம்பி. அவர்சொல்லிக் கொண்டிருக்கவே கலைந்து செல்லும் மேகங்களை போல் சற்று தூரத்தில் ஒரு மனிதன் தென்பட்டான். அவனை நான் பார்த்துக்கொண்டிருந்ததை இவரும் பார்த்துவிட்டார். தொலைவில் ஒரு மனிதர் நல்ல கலையான முகம், ஆனால் வயிறு காய்ந்து போன வறுமையினால் வாடியது போல ஊர்ந்து வந்துகொண்டு இருந்தார். இருகால்களும் ஊனமான மனிதர். என் வயதைவிட அதிகமான வயதிருக்கும். ஆனால் ஏதோஒரு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே என் மனதில் பட்டது. எல்லோரிடமும் கையேந்தி கொண்டிருந்தார்.
ஆனால் அதையும் தாண்டி அவர் வாழ்க்கையை சொல்லி இவர் என்னை வருத்துவார் என நான் நினைக்கவே இல்லை. தம்பி அவர்பெயர் சோலையன், அவருக்கு சொந்தவூர் கிருஷ்ணகிரி தான். அதெப்படி சார் உங்களுக்கு தெரியும். புன்னைகையே தவழ்ந்தது அவர் முகத்தில். இந்த ரயிலில் நான் பல வருடங்களாக பயணம் செய்யும் அனுபவம் எனக்கு தம்பி. அப்படிப் பயணிக்கையில் நிறைய பேர் என்கூட பேசுவாங்க, நான் சிலரிடம் பேசுவேன். ஆனால் எவரிடமும் அன்பு செலுத்தனும் என்பதே எனது கொள்கை. ஏனென்றால் அன்பு செலுத்த முடியாத ஒருவர் மிருகத்திற்கு சமம்.அப்படி அன்பாக உன்னை மாதிரி நிறையப்பேரை நான் பார்த்து இருக்கிறேன்.
பெங்களூரில் இருந்து கிரிஷ்ணகிரி தர்மபுரி செல்லுவோர் சில சமயங்களில் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தால் புக்கிங் கம்பார்ட்மெண்டல பயணம் செய்வார்கள். அப்படி ஒருநாள் என்கூட இந்த ரயிலில் பயணித்த மனிதர் உங்களை மாதிரி தான் அந்தமனிதரை வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தவர் முகத்தினை நான் ஒரு கள்ளகுணத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன். பின்புதான் நீ பார்த்துக்கொண்டு இருந்த மனிதர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று எனக்கே தெரியவந்தது. அதன்பின்பு எனது அருகில் இருந்தவரிடம் நான் பேசினேன்.
அருகில் இருந்தாரே அந்த மனிதரிடம் சோலையன் பற்றி கேட்டுக்கொண்டேன். தம்பி ஏன் தம்பி அவரைப் பார்த்த உடனே கண்கலங்குறீங்க என்றேன். அவர் கண்கலங்கிக் கொண்டே என்னிடம் சொன்னார். இப்போ அவரோட வயது ஒரு நாற்பந்தைந்து முதல் ஐம்பதுக்குள் இருக்கும் சார். எனக்கு விவரம் தெரிஞ்சதில் இருந்து அவரைத் தெரியும். அவருக்கும் எனக்கும் சொந்தவூர் கிருஷ்ணகிரி தான். ஒரேதெருவில் தான் அவரும் நானும் வாழ்ந்து வந்தோம். எனக்கு ஐந்து வயது இருக்கும்போதிலிருந்து அவரைத் தெரியும். அப்போது அவர் கல்யாணம் ஆகாமல் சந்தோசமாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார். எனக்கும் அவருக்கும் உள்ள அன்பு அதிகம். ஆனால் அதுஏதும் உணரமுடியாத நிலையில் அவர் இருக்கிறார்.
என்ன தம்பி சொல்றிங்க. ஆமா சார் அவருக்கு எதுமே நியாபகம் இல்லை உணவைத் தவிர. அவர் சாதாரண மனிதனைப்போல் தனிமனித சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தார்.எனக்கு ஒரு ஐந்து வயதிருக்கும் அவருக்கு ஒரு இருபந்தைந்து வயது இருக்கும். அவர் அப்போது கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தார். வாழ்க்கைன்னா அவர் மாதிரி வாழனும் சார். மனைவியையும் பொறந்த மகனையும் அவளோ சந்தோசமா பார்த்துக்கொள்வார். ஆனால் அதிகமாக குடிப்பழக்கம் உள்ளவர். குடித்துவிட்டால் மனிதன் மழலை என்றுதான் நான் சொல்லுவேன். குடித்துவிட்டால் அரசியல் பேசுவார், நல்ல நகைசுவையாளரும் கூட. குடித்துவிட்டு வந்தார் என்றால் எங்கள் தெருவில் உள்ள அனைவருமே அவர் அருகில் தான் சார் இருப்போம். அவர் குடித்துவிட்டார் என்றால் அவருக்கு சாப்பாடு நாங்க யாரவது தான் கொண்டு வருவோம், நாங்க எல்லாரும் சேர்ந்து ஊட்டிவிடுவோம்.அவ்வளவு அன்பான மற்றும் நகைசுவை உணர்வு உள்ள மனிதர்.
நாங்க எல்லாம் காலை எழுந்து பள்ளிக்கூடம் கெளம்பிக்கொண்டு இருப்போம், அவர் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருப்பார். அப்போ அவர் ஓசூர் பக்கத்துல எதோ ஒரு க்ரானைட் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். தினந்தோறும் எங்களோட ஸ்கூல் பஸ்ல தான் வருவார் போவார். குடித்துவிட்டு வந்துவிட்டார்னா பஸ்லயே ஒரே அமர்க்களமா இருக்குமாக்கும்.
ஒரு நாள் அப்படி தான் குடித்துவிட்டு வந்துட்டார், நாங்க எல்லாம் பஸ்கு காத்துக்கொண்டு இருந்தோம். பஸ் வர கொஞ்சம் டிலே ஆகிருச்சு, அங்க ஒரு ஆர்மி மேன் நின்று கொண்டு இருந்தார். நேர போனார் டைம் கீபேர்னு நெனச்சு ஆர்மி மேன் கிட்ட யோவ் பெரியவரே பஸ் எப்பவரும் என்றார். அவர் தம்பி என்ன பார்த்த உனக்கு பஸ் நேரம் சொல்றவன் மாதிரியா இருக்குனு கேட்க. யோவ் ஓன் மூஞ்சி அப்டி தானே இருக்கு. எப்போவரும் சொல்லு என்றார். நாங்க இங்க இருந்து விழுந்து விழுந்து சிரிச்சோம், அந்த நேரம் பார்த்து அவர் சாரம் அவுந்துவிழ ஒருஅக்கா அபசாரம் அபசாரம்னு சொல்ல. என்னங்கடி பார்க்க கூடாததயா காட்டுறோம் போங்கடி என்றார்.
அப்புறம் எங்க ஊர்ல மழை காலங்களில் தென்னைமரத்துல நெறய இளநி இருக்கும். நாங்க பிளான் பண்ணி அவரைத்தான் கூப்பிட்டு போவோம். அண்ணன் கொஞ்சம் நல்லா மரமும் ஏறும். ஒரு நாள் அப்படி நாங்க இளநி பறித்து கொண்டிருக்க அந்த மரத்தோட சொந்தக்காரர் வந்துவிட்டார். நாங்க எல்லாரும் தெறிச்சு ஓடிட்டோம் இவரும் மேல இருந்து அவர் வருவற்குள் இறங்கிவிடலாம் என இறங்க அவர் அருகில் வந்துவிட்டார். இவர் மரத்துல இருந்து இறங்கும் வர அவர் காத்துக்கொண்டு இருந்தார். இறங்கியவுடன் டேய் ஏன் வீட்டு தென்னைமரத்துல என்னடா பண்ற எனக்கேட்க. இவர் ஆன் தென்னைமரத்துல புல்லு புடிங்க போனேன் என்றார். என்ன தென்னைமரத்துல புல்லு என்ன லந்தா. தென்னைமரத்துல எப்படி டா புல்லு இருக்கும். அறிவில்லாதவன் ஒன் மரத்துல தான் புல்லு இருக்கும்னு சொன்னாங்க அதான் ஏறினேன்ப்பா எனச்சொல்லி தப்பி வந்து விட்டார்.
இதுதாங்க வாழ்க்கை நாம நினைக்கும் பலவிதமான மனிதர்களுக்குள் பலவிதமான கதைகளும் சோகங்களும் இருக்கு. சோலையனின் மீதி வாழ்க்கையை பற்றிய கதையை அடுத்தவாரம் தொடங்கி முடிக்கிறேன். அதுவரை அமைதியாக அனுபவிங்கள் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை.
பூவிதழாக,
தமிழினியன்


கருத்துகள்
கருத்துரையிடுக