வெண்பா
2.இரயில் பயணங்களில்
நாகர்கோவில்
எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி இங்கு
சொல்லியே ஆகவேண்டும், ஏனென்றால் பயணத்தின் அனுபவங்களையும் அதன் கால நேரங்களையும்
பிழையில்லாமல் சொல்லவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கின்றேன். அதுபோல வெறும் பயணத்தின்
அனுபவங்கள் மட்டுமே என் வெண்பாவின்
கதை அல்ல. இது எனது
கதையின் தொடக்கமே. வெவ்வேறு காலங்களில் மாறுபட்ட சூழ்நிலைகளில், இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றாக கோர்த்துள்ளேன். ஆங்காங்கே
என் கதையின் அரசர்களும், அரசியரும்
கதையை சுமந்து செல்ல பயணப்படுவர்.
சிலர் வழிப்போக்கனாக சமுக நிகழ்வுகளையும், இந்திய
அவலங்களை உணர்த்துவர். சரி இப்போ நாகர்கோவில்
எக்ஸ்பிரஸ் பற்றி சொல்ல வந்த
செய்தியை சொல்கிறேன். இந்த ரயில் மாலை
5.15க்கு பெங்களூர் மெஜஷ்டிக் ரயில் நிலையத்தில் தொடங்கி
நாகர்கோவிலை மறுநாள் காலை 8க்கு
சென்றடையும். தொடக்க நேரமும் இறுதி
நேரம் மட்டுமே ரயில்வே நேரப்படி
சரியாக இருக்கும், மற்றபடி ரயில்வே க்ராஸிங்
ரொம்பவே இந்த ரயிலுக்கு தடையாகவே
அமையும். இந்த தாமதம் சிலருக்கு
இன்பத்தையும் சிலருக்கு கோபத்தையும் மனதில் உண்டாக்கும். என்மனதில்
சந்தோஷம் தோன்றினாலும் நான் கண்ட மனிதர்கள்
அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னுள் அதிகம். அப்படி
தாக்கம் ஏற்படுத்தி என் நினைவுகளை தூண்டிவிட்டவன்
சிறுவன் "மதீ". அவனுடைய ஆழமான சிந்தனையும்,
இதுதான் எனது வாழ்க்கை இதைத்தான்
நான் அடையவேண்டும் என அவன் குருதி
கொண்ட உறுதி எனை நிறைய
யோசிக்க வைத்தது. அந்தவிதமான சிந்தனையில் சென்றபோது எந்தவித சப்தமும் இல்லாததை
உணர, ரயில் கன்டோன்மண்ட் ஸ்டேஷனை
அடைந்தது. இந்த ரயில் கன்டோன்மண்ட்
ஸ்டேஷன் செல்லும் 15 நிமிடங்கள் முன்னதாக கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் கடந்து செல்லும். அறியாத
சிலர் சில சமயங்களில் மாறி
ரயிலில் ஏறுவோரும் உண்டு. அப்படிச் தவறவிட்ட
சிலர் ரயில்வே ப்ளாட்ஃபார்மில் சோகமாக
நின்றுகொண்டு இருந்தனர். உனக்கு எப்படிடா தெரியும்னு
கேட்கத் தோன்றும் அல்லவா? அவர்கள் தங்களுக்குள்
மலையாளம் பேசிக்கொண்டு இருந்தனர், திருவனந்தபுரம் செல்ல சிலர் மதுரை
வழியே நாகர்கோவில் சென்று மாறுவோரும் உண்டு.
அதில் சிலர் நான் செல்லும்
ரயிலில் ஏறினர். ரயில் நிற்கவே
சிலர் "டீ காபி வடை
வாட்டர் பாட்டில்" எனக்கூவ எனது எதிரில்
இருந்த பெரியவர் "டீ வாட்டர் பாட்டில்"
வாங்க, தம்பி "டீ சாப்பிடுரிங்களா!" என்றார். யாரையோதான்
கேட்கிறாரோ எனநினைக்க, தம்பி உங்களைத்தான் என்றார்.
இல்ல பரவாயில்லை என்றேன். சிரிப்புடன் சொன்னார் தம்பி சாப்பிடுங்கள் எனச்சொல்லி
அன்புடன் எனது கையில் கொடுத்தார்.
"அன்புஈனும்
ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும்
நாடாச் சிறப்பு"
எனும் வள்ளுவரின் வரிகள் தான் என்மனதில்
உதித்தது. காசு பணம் பாராமல்
பிறரின் நலம் வளம் உணர்ந்து
நம் செயல்இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்த்தினார்.
அவருடன் பேசலாமென நினைக்க, தடுமாறி பேசத் தொடராமல்
சிரித்து நன்றி என்றேன் அவரிடம்.
அவரும் புன்முறுவினார். இருவரும்
சிறிது நேரம் அமைதியானோம்.
சிலரிடம்
பேச நம்மிடம் சில தயக்கம் இருக்குமல்லவா,
அது சிலரிடம் இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் வாழ்வில் நிறைய சந்தர்ப்ப சூழ்நிலைகள்
அதை உடைத்து உணர்த்தியிருக்கும். அப்படி
சில காயங்களும் நிகழ்வுகளும் சிலரை சுதந்திரமாகவும், மென்மையாகவும்
மாற்றும். அப்படி சில காயங்கள்
இவர் மனதிலும் இருக்கவேண்டும்.
அவர் மீண்டும் மிதமான ஒலியில் இசையில்
மூழ்கி, கை விரல்களால் இசைந்து
தாளமிட்டும், தலையினால் நடனமிட்டும் இருந்தார். என் மனதில் பலவிதமான
எண்ணங்கள் ஓடின. இவ்வளவு ஆனந்தமாகவும்,
சிலிர்ப்புடனும் எங்கே செல்கிறார், யார்
இவர், என்ன செய்கிறார், ஏன்
இவ்வளவு ஆனந்தம் எனத் தெரிந்து
கொள்ள முனைந்தேன்.
உங்கள்
மனதில் இதை வாசித்து முடித்தபின்
அவர் யார், அவருக்கும் இந்தக்
கதையின் போக்கிற்கும் என்ன சம்மந்தம் என
நினைத்தால் காத்திருங்கள். சுமையான சுகத்தில் அவரின்
அனுபவங்களையும், இன்பங்களையும் உங்கள் இதயத்தில் வலியுடன்
என் வரிகளால் செதுக்குவேன். இப்படி நான் சொல்லியவுடன்
காதல் என்பதை நீங்கள் உணர்ந்தால்
அதற்கு நான் பொறுப்பல்ல. என்
எழுத்தினால் கூட உங்களை நான்
ஏமாற்ற விரும்பவில்லை.
ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு எனது படைப்பான வெண்பா'வின் தொடர்ச்சி எனது இணையத்தில் பதிவிடப்படும். கற்று கொண்டு இருக்கிறேன் பிழைகள் இருப்பின் என்னை திருத்திக்கொள்வேன், தாங்களும் தங்களது புன்சிரிப்பால் எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக